Friday, February 7, 2014

கற்பனைத் தடை

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். இனிய நாளில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கற்பனைத் தடை.!!! இது கற்பனைக்குத் தடை அல்ல, கற்பனையாய் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் தடை. நமது வாழ்வில் பிரச்சினைகளாக நினைக்கும் பல விஷயங்கள் இந்த கற்பனையான தடைகளால் என்று எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறோம். உதாரணத்திற்கு எப்பவும் போல ஒரு கதையைப் பார்ப்போமா…

அக்பரின் அரசவை. வெளிநாட்டில் இருந்து வந்த மதியூகி ஒருவர் அக்பரின் மந்திரிகளுக்கு ஒரு சவால் விடுக்கிறார். தனது பையில் இருந்து மூன்று பெட்டிகளை அரசவையினர் முன் வைத்து உங்களில் யார் தங்களை மிகப்பெரிய புத்திசாலி என்று நினைக்கிறீர்களோ அவர் இதில் என்ன இருக்கிறது சொல்லுங்கள் பார்க்கலாம் என்கிறார்.

அக்பரின் அவையில் வீற்றிருந்த மந்திரி பிரதானிகள் அனைவரும் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தலை கவிழ்ந்து வாய் மூடி இருந்தனர். அப்பொழுது தான் அரசவைக்குள் நுழைந்த பீர்பால் மந்திரிகளின் தலைகுனிவிற்கு என்ன காரணம் என விசாரித்து விட்டு, ப்பூ, இவ்வளவு தானா பிரச்சினை என்று நேராக அந்த வெளிநாட்டு மதியூகியின் முன் சென்று அவர் அரசவை முன் வைத்திருந்த மூன்று பெட்டிகளையும் திறந்து அதில் என்ன இருக்கிறது என அனைவருக்கும் தெரியப்படுத்தினார். அதன்பின், கேள்வி பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்பது தானே ஒழிய, அதனைத் திறந்து பாராமால் சொல்லுங்கள் என்பதல்ல என்று விளக்கமும் கொடுக்க அக்பரின் அரசவையினர் மகிழ்ச்சியில் ஆரவாரித்தனர்.

பெட்டியில் என்ன இருக்கிறது எனக் கேட்டவுடன், பெட்டியைத் திறந்து பார்க்காமல் பதில் சொல்ல வேண்டும் என அக்பரின் மந்திரிகள் புரிந்து கொண்டது கற்பனையான தடையால் தானே. இல்லாத கேள்வி ஒன்றை நாமாய் கற்பனை செய்து கொண்டு நமது முன்னேற்றத்திற்கு நாமே தடை போட்டுக் கொள்ளலாமா???

நமக்குத் தெரிந்த நண்பரொருவர் வாழ்வில் நடந்த இந்த சுவாரஸ்யத்தையும் பார்ப்போமே. நண்பரின் பள்ளிப் பருவம். கனித வகுப்பு நடந்து கொண்டிருந்தது. கணித ஆசிரியர் கேள்வி ஒன்றைக் கேட்டு விட்டு யாருக்குத் தெரிகிறதோ அவர்கள் கையைத் தூக்குங்கள் என்கிறார். நிறைய பேர் கையைத் தூக்கியிருக்கிறார்கள் நண்பர் உட்பட. ஒவ்வொருவராய் பதில் சொல்ல வைத்தார் ஆசிரியர். யாருடைய பதிலும் ஆசிரியருக்கு ஒப்பவில்லை. நமது நண்பருக்கு முன்னதாக ஒருவன் சொன்ன பதிலில் ஓரளவு திருப்தி கொண்ட ஆசிரியர், நண்பரிடம் அவன் சொன்னதில் என்ன பிழை என்று கேட்டிருக்கிறார்.

நண்பருக்கோ அவருக்கு முன் சொன்னவரின் பதில் தான் தனக்கும் தெரிந்ததால் அதையே மீண்டும் சொன்னார். இறுதியில் ஒரு மாணவன் மிகச் சரியாய் பதில் உரைத்ததும், நண்பரைப் பார்த்து கணித ஆசிரியர் இனியேனும் படிப்பதை கவனமுடன் படி என்று சிரித்துக் கொண்டே சொல்ல, நமது நண்பர் ஆசிரியரைப் பார்த்து ஒரு கேள்வி எழுப்பினார்.

ஐயா, நீங்கள் பிழை என்ன என்று தான் கேட்டீர்களே அல்லாமல் பிழையைத் திருத்தி பதில் சொல்லுமாறு பணிக்கவில்லையே என்று.

என்ன??? நண்பர் ஆசிரியரிடம் கேட்ட கேள்வி சரிதானே…

மனித எந்திரமும்; எந்திர மனிதமும்

உறக்கம் கலையும் முன் வெளியேறி
உறங்கிய பின் அவள் உச்சி முகர்ந்து
படுக்கைக்குப் போகையில்
என் பத்தினி சொன்னாள்

சொல்ல ஆரம்பித்து விட்டாளாம் மகள்
அப்பா என

முடிவெடுத்தேன்
அலுவலகத்தை குறைத்து
அன்பு மகளுக்கு காட்ட வேண்டும்
அப்பா வெறும் வார்த்தையல்ல
நான் தானென்று.

விழித்தெழ வைத்த கடிகாரம்
விடாமல் அலறுகிறது
விடைதேடி...
அப்பாவா??? அலுவலகமா???

கவிதை என்றால் என்ன?

எண்ணத்தைச் சற்று எதுகை மோனையோடு ஒரு சீரான தாள கதியில் எழுதப்படும் வார்த்தைக் கோவைகளை கவிதைகளாக எனது பதின்ம வயதில் ஏன் ஒரு நான்கு ஐந்து ஆண்டுகள் முன் வரையிலும் கூட நினைத்திருந்தேன். அப்படியே நானும் எழுதி வந்தேன். திடீரென்று கவிதை குறித்தான தேடல் துவங்கிய போது இந்த கருத்தில் ஒரு தளர்வு ஏற்பட்டு விட்டது.

பின்பு மரபுக்கவிதைகளை வாசிக்கையில் மரபுக்கவிதைகள் மாத்திரமே கவிதைகள் என்னும் எண்ணம் தோன்றியது. சில புதுக்கவிதைகளும் கூட ஏற்றுக் கொள்ளும் படி இருந்தது என்பதை மறுக்க இயலாது.

மரபில் சில காலம் கவனம் செலுத்தி ஓரளவு மரபில் எழுத பழகினாலும் இந்த புதுக்கவிதைகளை அதன் வடிவத்தை புரிந்து கொள்ளவோ எவை எல்லாம் இந்த புதுக்கவிதை வகையில் சேர்த்தி என்ற ஒரு முடிவுக்கு வரவோ இயலவில்லை.

நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், இணைய வெளி என எல்லாவற்றிலும் கவிதை என பதிக்கப்படுவதை பார்க்கும் பொழுது சில சமயம் சிரிப்பும், பல சமயம் கோபமும் மிகையாக வந்து செல்லும்.
உதாரணத்திற்கு,

விழுந்தவளைத்
தாங்கிப் பிடித்த நான்
விழுந்தேன்...
காதலில்.!

இது போல எதையாவது நான்கு ஐந்து வரிகளில் எழுதி கவிதை என பத்திரிக்கைகளால் பிரசுரிக்கப்பட்டு வெளிவரும் சமயம் நாம் இதனை எவ்வாறு அணுகுகிறோம் என்பதில் துவங்குகிறது இது.

இதனைப் பகடியாக்கி திரைப்பட காட்சி ஒன்று,

ஒரு ஸ்வீட் ஸ்டாலே
ஸ்வீட்டைச்
சாப்பிடுகிறதே!!!

அடடா ஆச்சர்யக்குறி என்பது போல எடுக்கப்பட்டது. ஆனால் அதை அந்த நொடி சிரிக்க மட்டுமே என சிரித்து பின் மறந்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க சென்று விடுகிறோம்.

கவிதை என எழுதப்படும் ஒன்றை கவிதை என ஒத்துக் கொள்ள கவிதை என்றால் என்ன எனத் தெரிந்தால் தானே இயலும்.

மரபுக்கவிதைகளுக்கு இலக்கணம் இருப்பதால் எளிதில் கவிதை என்று ஏற்றுக் கொள்ள இயலுகிறது. இந்த புதுக்கவிதைகளுக்கு இலக்கணம் தான் என்ன????

தமிழைத் தவிர்த்து பிற மொழிகளில் முக்கியமாக ஆங்கிலத்தில் பார்த்தாலும் இந்த குழப்பம் இருக்கத் தான் செய்கிறது.

உதாரணத்திற்கு,

கிறிஸ்டினா ஜார்ஜினா ரோசெட்டியின் இந்த கவிதையைப் பார்ப்போம்.

//If I were a Queen,
What would I do?
I’d make you King,
And I’d wait on you.
If I were a King,
What would I do?
I’d make you Queen,
For I’d marry you.       //

இதனை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து

நான் இராணியாக இருந்திருந்தால்
நான் என்ன செய்திருப்பேன்?
உனக்காக காத்திருந்து
உன்னை இராஜாவாக்கியிருப்பேன்.
நான் இராஜாவாக இருந்திருந்தால்
நான் என்ன செய்திருப்பேன்?
உன்னை மணமுடிப்பதற்காக.
உன்னை இராணியாக்கி இருப்பேன்,


( மொழிபெயர்ப்பு சரியா என உறுதியாக கூற முடியவில்லை)

என எழுதி இதுதான் கவிதை என இங்குள்ளவர்களை ஒத்துக் கொள்ளச் செய்ய இயலுமா என்றால் தெரியவில்லை.

ஆனால், இங்கிலாந்தில் இதனை கவிதை என அந்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இது அவர்களின் மொழி வழக்காக/ கவிதை வடிவமாக இருந்து வருகிறது. அதாவது எண்ணத்தை எண்ணியபடியே அப்படியே பதித்து வைப்பதை கவிதை என ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் அங்குள்ள மக்கள் இருக்கிறார்கள்.

ஆனால், நமது மொழியில் இவ்வாறு எழுதினால் கவிதை என ஏற்றுக் கொள்ள அனைவராலும் இயலுமா???

இதனை இங்கு குறிப்பிடும் காரணம் யாதெனின் ஒரு மொழி பேசும் மக்கள் பெரும்பாலானவர்களால் கவிதை என ஏற்றுக் கொள்ளப்படுபவையாக, எழுதப்படும் கவிதை இருக்க வேண்டும் என்பதே அன்றி பிற மொழிக் கவிதைகளின் தரம் பற்றிய விமர்சனத்திற்காக அல்ல.

ஆனால், நான்கு வரியை மடக்கி மடக்கி எழுதி இதுதான் கவிதை என்று கவிதைக்கான இலக்கணத்தை மக்கள் மனதில் தவறாக விதைக்கும் பத்திரிக்கைகள் இருந்தால் நாளை யார் என்ன எழுதினாலும், எழுதப்படும் யாவுமே கவிதைகள்  என்று எண்ணி மக்கள் குழம்பும் நிலை உருவாகி விடுமே.

இது குறித்து ஏன் பத்திரிக்கைத் துறையில் இருக்கும் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழில் இயலதமிழை வலிந்து இசைத்தமிழாக்கும் முயற்சி எதற்கு.

கட்டுரை வடிவில் தெளிவான பார்வையை ஒருவர் வைக்க இயலும் பொழுது, தான் சொல்ல வந்த கருத்தை கவிதை வடிவில் தந்து சொல்ல வந்த கருத்தையும் சிதைத்து, கவிதைக்கான நடையையும் சிதைக்க வேண்டிய அவசியம் என்ன? கட்டுரையாகவோ, கதையாகவோ இவர்களை, தங்களின் கருத்துகளை பகிர வைப்பதை தடுக்கும் காரணிகள் என்ன?

இது தவறு என ஒருவருக்குத் தெரியாமல்/புரியாமல் இருப்பதாலேயே பெரும்பாலான தவறுகள் நிகழ்கிறது. இதுவும் அது போலத் தான். உண்மையில் புதுக்கவிதை என்றால் என்ன, அதற்கான கூறுகள் எப்படி இருக்க வேண்டும் என பரவலாக அறியாமல் இருப்பது தான் கவிதையின் தரம் நலிந்து, வெற்று வார்த்தைக் கோவைகள் கவிதையாக வலம் வரக் காரணமாயிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டுமானால் உண்மையில் ஒரு கேள்விக்கான தேடலை கவிதை எழுத முனைவோர் தேடுவது அவசியமாகிறது. அது,

கவிதை என்றால் என்ன?


உங்களில் எவரேனும் பதிலைத் தேடிக் கண்டுபிடித்தால் மறக்காமல் சொல்லி விடுங்கள், எனக்கும்.!

முகக்குறிப்பு

சிரித்தாள்..
பின் சிலிர்த்தாள்...
அதன் பின் அழுதாள்...

சிரித்தபடி அழுதும்
அழுதபடி சிரித்தும்
ஏமாற்றினாள்...

நொடிக்கொருமுறை மாறும்
முகக்குறிப்புகளுக்கு
விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தோம்...

பிள்ளையார்
பிள்ளையிடம்
விளையாடிக் கொண்டிருக்கிறார்.

கடந்த காலத்தின்
எச்சத்தை மிச்சமின்றி
அசை போடுகிறாள்.

வருங்கால வாழ்வு
மொத்தத்தையும்
முழுபடமாய் காண்கிறாள்.

குறிப்புகள் வார்த்தைகளாகும் நாளில்
அழிந்து போய் விடலாம்....
முகக்குறிப்புகளும் அதன் விளக்கங்களும்.!

லீட்ஸில் ஓர் நாள்

பேருந்து நிலையத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். எனது வீட்டு அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஒருவர் என்னை நிறுத்தினார். எனக்கு ஒரு உதவி வேண்டும். எனது நண்பரின் வீட்டிற்கு இங்கு வந்தேன். எனது இரண்டு மொபைல்களும் ஸ்விட்ச் ஆப் ஆகி விட்டது. எனது நண்பரின் வீடு ஒரு மருத்துவமனைக்கு அடுத்து இருக்கும். மருத்துவமனையைத் தாண்டி ஒரு பூங்கா இருக்கும். அந்த பூங்காவில் குழந்தைகளுக்கான சறுக்கு விளையாட்டு இருக்கும் என்றார். ஐயா, இடத்தின் பெயரோ அல்லது ஏதேனும் ஒரு அடையாளமோ சொல்லுங்கள் என்றேன். அது தெரிந்தால் நான் டாக்ஸி பிடித்து போய் விடுவேனே என்றார். சட்டென கோபம் வந்தாலும், மன்னிக்கவும் ஐயா தெரியாது எனச் சொல்லி அகன்றேன்.

இரண்டு அடி எடுத்து வைத்த பின், முகம் இந்தியரைப் போல இருக்கிறதே பாவம், நமது வீட்டிற்கு அழைத்துச் சென்று மொபைல் சார்ஜ் செய்ய அனுமதித்தால் அவர் நண்பர் வீட்டிற்குச் சென்று விடுவாரே என எண்ணியவாறு, அவரை வேண்டுமானால் எனது வீட்டிற்கு வந்து உங்களது மொபைலை சார்ஜ் செய்து கொள்ளுங்களேன் என்று அழைத்தேன்.  

சரி என்று என்னுடன் வர சம்மதித்தவரிடம் சார்ஜர் வைத்துள்ளீர்களா என்று கேட்டேன். இல்லை என்றார். அவரது ஒரு மொபைல் ஐபோன் என்பதால் எனது மொபைலின் சார்ஜர் உபயோகப்படுத்தலாம் என்று எண்ணி சரி பார்த்துக் கொள்ளலாம் வாருங்கள் என்று அழைத்துச் சென்றேன். ஏதோ சட்டென்று கேட்கத் தோன்றியதால் நீங்கள் இந்தியரா என்று கேட்டேன். அவர் இல்லை பாகிஸ்தானி என்றார்.

பாகிஸ்தானி என்று சொன்னவர் சற்று நின்று, இப்பொழுதும் என்னை உங்கள் வீட்டிற்குள் அனுமதிப்பீர்களா என்றார். அவரிடம் சினேகமாக, ஐயா, நான் நாட்டைப் பார்ப்பவன் கிடையாது, மனிதர்களைப் பார்ப்பவன். தாராளமாக வரலாம் உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்றேன்.

வீட்டிற்கு இருவரும் வந்தோம். எனது சார்ஜரைத் தேடி எடுத்து அவரது மொபைலை சார்ஜ் செய்யலாம் என நினைத்தால் சார்ஜர் சரி வரவில்லை. ஐயா, உங்கள் போனை கம்ப்யூட்டரோடு இணைக்கும் கனெக்டராவது வைத்திருக்கிறீர்களா என்றேன். இல்லை என்றார். உங்களது நண்பரின் மொபைல் எண்ணாவது நினைவிலிருக்கிறதா என்றேன். அதற்கும் மொபைலில் தான் இருக்கிறது, நினைவில் இல்லை என்றார். சரி திண்பண்டங்கள் இருக்கிறது எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். ரம்ஜான் நோன்பில் இருப்பதாகச் சொன்னார். சட்டென நாக்கைக் கடித்துக் கொண்டவனாக, மன்னிக்கவும், மறந்து போய் கேட்டு விட்டேன் என்று சொன்னேன்.

இன்று நிச்சயமாக என்னுடைய நாளே இல்லை என்று சொல்லி வருத்தப்பட்டார். சரி உங்கள் நண்பரின் மொபைல் எண், போனில் ஸ்டோர் செய்திருக்கிறீர்களா இல்லை சிம்கார்டிலா என்று கேட்டேன். தெரியாது என்றார். சரி, கடைசி முயற்சி, உங்களது சிம்மைக் கழற்றித் தாருங்கள். எனது மொபைலில் போட்டு பார்க்கலாம் எனச் சொல்லி அவரது சிம்மை வாங்கி எனது மொபைலில் போட்டு அவரின் நண்பருடன் பேச வைத்து, அந்த நண்பர் இன்னொரு நண்பருக்கு கைகாட்டி விட, அவருக்கும் அழைத்துப் பேசி முகவரி வாங்கினால், அவர் சொன்ன முகவரியை இவர் தவறாகப் புரிந்து கொண்டார். எதற்கும் இருக்கட்டுமே என பேருந்து எண்ணைக் கேட்டு வாங்கச் சொன்னேன்.

எந்த நிறுத்தம் என்று நானாக ஓரளவு புரிந்து கொண்டு நான் அவரைச் சரியான பேருந்தில் ஏற்றி விட்டு கணினி முன் இப்பொழுது அமர்கிறேன். ஒருவருக்கு உதவிய ஆத்ம திருப்தி எனக்கு. இன்றைய நாள் நல்ல நாளாக அமைந்தது. இறைவனுக்கு நன்றி.

உங்களிடம் நான் இதனை இங்கு நான் சொல்வது பெருமைக்காக அல்ல.

புதிய இடத்திற்குச் செல்லும் பொழுது நாம் சில விஷயங்களை மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை நினைவுறுத்த வேண்டியே.

செல்லும் இடத்தின் முகவரியைத் மொபைலின் டிராப்டிலும் ஒரு பேப்பரிலும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

புதிய இடத்தில் நீங்கள் நம்பிச் செல்லும் நபரின் மொபைல் எண்ணை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

முடிந்த அளவு நண்பரை பேருந்து நிலையத்திற்கே வரச் சொல்லி மீண்டும் இருவரும் தங்கள் இருப்பிடம் செல்வது நன்று.

நீங்கள் ஒரு மோசமான சூழலில் இருக்கும் போது பதட்டப்படாமல் உதவ நினைப்பவர்களுக்கு உங்களால் இயன்ற அத்தனை தகவல்களையும் நிதானமாக சிந்தித்துச் சொல்லுங்கள். இல்லை, தெரியாது என்ற பதில்கள் உங்களுக்கு உதவாது.

முக்கியமாய் மொபைலை புல் சார்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். அத்தியாவசியமான அழைப்புகள் மட்டும் செய்யுங்கள். ரோமிங்கில் இருக்கும் போது சார்ஜ் சீக்கிரமே குறைந்து விடும்.

ரோமிங்கில் இருக்கும் போது தேவைப்பட்டால் ஒழிய இணையத்தை உபயோகம் செய்யாதீர்கள். இணையம் உங்களின் மொபைல் சார்ஜை எளிதில் கரைக்கும் ஒரு வஸ்து.